பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள்: தூ.டி நீதிபதி உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண், உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் எனது கணவர் சென்னையில் பணிபுரிகிறார். எங்களுக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். 17 வயதாகும் மகள் உடல் மற்றும் மன வளர்ச்சிகுன்றியவர். நான் கூலி வேலைக்குச் சென்றதைப் பயன்படுத்தி பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதான பொன்ராஜ், என் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன்காரணமாக என் மகள் கர்ப்பமானார். இதுதொடர்பாக அவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்ராஜ் மீது கடம்பூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிப்.3-ம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பொன்ராஜ் குடும்பத்தினர் அரசியல் மற்றும் பண செல்வாக்கு மிக்கவர்கள். இதனால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க போலீஸ் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவும், என் மகளின் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மனுதாரரின் மகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் மனுதாரரின் மகளை பரிசோதித்து, அவர் வயிற்றில் 24 வாரக் கரு வளர்வதாகவும், கரு கலைப்புக்கு ஏற்ற உடல் நிலையில் அவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கவும், கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் மரபணுச் சோதனைக்காக கருவைப் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறிஇருப்பதாவது: இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மைனர்பெண். அவர் தாயாரின் பராமரிப்பில் இருந்தபோதே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மீண்டும் பெண்ணுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இதனால், கருக்கலைப்புடன் நின்றுவிடாமல் கருக்கலைப்புக்கு பிந்தைய கவனிப்பும் அவருக்குத் தேவை, எனவே மனுதாரரின் மகளுக்கு கருக்கலைப்பு முதல் அவர் உடல் நிலை சீரடையும் வரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்தில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடிய குற்றங்களால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான காப்பகம் அமைப்பதில் கவனம் செலுத்துவது தொடர்பாக தமிழக சமூக நலத் துறைச் செயலர் மற்ற துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி 8 வாரங்களுக்குள் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.