thoothukudi

தூத்துக்குடியில் மக்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் சார்பில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் சுற்றுவட்டார கிராமங்களில் கொண்டாடப்பட்டதாகவும், அதற்கான பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அதிகாரிகள், அலுவலர்கள் அந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் (18-01-2020) சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த நாளிதழ் செய்தியை பார்த்த பல கிராமங்களில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால் இந்த கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள், பெரியோர்கள் வசூல் செய்தும் மற்றும் ஊர் கணக்கில் இருந்தும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் கொண்டாடப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் தான் நடத்தியுள்ளார்கள். உண்மை இப்படியிருக்க ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செலவில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தியதாக ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மைக்கு புறம்பாக பத்திரிகைகளில் செய்தி கொடுத்துள்ளது.

இது ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களை மதிப்பிழக்கச் செய்யவும், அவதூறு செய்யும் விதமாகவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இது விஷமத்தனமானது.

இந்த பொய்யான செய்தி கொடுத்து வெளியிட செய்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மறுப்பும், மன்னிப்பு செய்தியும் உடனே வெளியிட வேண்டும் என்று பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் முன்பு ஊர் மக்களும் ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராம மக்களும் ஒன்றாக கூடி அமர்ந்து தங்களது எதிர்ப்பை (18-01-2020) மாலை பதிவு செய்தனர்.

தமிழக அரசுக்கு விரோதமாகவும- எதிராகவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து இது போன்ற சட்ட மீறல்களை செய்து ஸ்டெர்லைட் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு ஆலை நிர்வாகம் காரணமாக இருக்கிறது. இதனால் சிப்காட் காவல் நிலையத்தில் ஸ்டெர்லைட் மீது வழக்கு பதிவு செய்ய புகார் கொடுப்பதாக முடிவு செய்தனர்.

அந்த அடிப்படையில் (19-01-2020) மாலை 6.00 மணிக்கு சிப்காட் காவல் நிலையத்திற்கு பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியபுரம், மடத்தூர், சோரீஸ்புரம், காயலூரணி உட்பட ஒவ்வொரு கிராம பிரதிநிதிகளும் நேரில் வந்து அந்தந்த கிராம மக்கள் சார்பாக புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சிப்காட் காவல்துறை ரசீதுகள் மட்டும் கொடுத்துள்ளார்கள். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், விசுவாசமாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செயல்படுகிறது. இந்த புகாரின் பேரில் தகுந்த நடவடிக்கை ஸ்டெர்லைட் நிறுவனம் மீது எடுக்கப்படவில்லையென்றால் அனைத்து கிராம பிரதிநிதிகளும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஆதரவு கொடுத்த – பங்கெடுத்த கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளும் ஸ்டெர்லைட்டின் இத்தகைய சட்ட முரணான நடவடிக்கைகளை, குற்றச் செயல்களை, தமிழக அரசாணைக்கு எதிரான – எள்ளளவும் மதிக்காத போக்கை கண்டிக்க வேண்டும். தமிழக அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று நமது கூட்டமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.