(01.08.2020) இரவு சுமார் 8 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அப்பாஸ் பள்ளி தெருவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின் அங்கிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும், இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும்,
கொரோனா வைரஸ் தொற்று எதிர்கொள்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அது அதிகரிப்பதற்கு கபசுரக் குடிநீர் குடிப்பது, சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, சத்தான காய்கறிகளை உட்கொள்வது ஆகியவற்றின் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
இக்கூட்டத்திற்கு காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை அமைப்பு தலைவர் திரு. கலாமி ஆஜிம்யார், செயலாளர் நவாஸ் அகமது மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் வியாபாரிகள் ஊர் முக்கியஸ்தர்கள் திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.பாரத், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி, இதர காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.