மெட்ரோவின் புதிய திட்டம் வெளியீடு – சென்னை

மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது சுரங்கப்பாதையில் உள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் புதியதாக 32 ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ” ஆலந்தூர், கோயம்பேடு உட்பட 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு வங்கிகள் மூலம் ஏடிஎம் வசதி ஏற்படுத்தி உள்ளோம். இதன் பிறகு சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்பகுதிகளில் ஏடிஎம்கள் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது. மற்றும் ஷெனாய் நகர், பச்சையப்பா கல்லூரி, சைதாப்பேட்டை, நந்தனம், எல்ஐசி, கீழ்பாக்கம், நேரு பூங்கா, திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை,டிஎம்எஸ், ஆயிரம் விளக்கு, அரசு விருந்தினர் மாளிகை, உயர் நீதிமன்றம், மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் 32 ஏடிஎம்கள் நிறுவப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தலா 5 சதுர மீட்டர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வங்கிகள் முடிவு செய்த பின்னர், அவர்கள் ஏடிஎம்கள், பணம் செலுத்தும் இயந்திரங்களை அமைப்பார்கள்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *